தமிழ்நாடு அறிவியல் இயக்கம்
245, அவ்வை சண்முகம் சாலை,
கோபாலபுரம், சென்னை 600086.

அன்புடையீர்,
அறிவியல் வணக்கம்.!

அறிவியல் மக்களுக்காக, அறிவியல் சுயசார்பிற்காக, அறிவியல் மக்கள் ஒற்றுமைக்காக, அறிவியல் நாட்டு முன்னேற்றத்திற்காக என்ற நோக்கங்களுக்காக கடந்த 1980 முதல் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. அறிவியல் இயக்கம் ஒரு தன்னார்வ மக்கள் இயக்கம். மக்களிடம் குறிப்பாக மாணவர்கள் மற்றும் இளைய தலைமுறையிடம் அறிவியல் மனப்பான்மையை வளர்ப்பதற்காக பல்வேறு விதமான செயல்பாடுகளை அறிவியல் இயக்கம் நடத்தி வருகிறது. அனைவரும் முழு எழுத்தறிவு பெறவேண்டும் என்ற நோக்கத்தில் அரசால் கொண்டுவரப்பட்ட அறிவொளி இயக்கத்தை மிகச்சிறப்பாக தமிழகத்தில் நடத்தியது தமிழ்நாடு அறிவியல் இயக்கம்.

மாணவர்களின் பல்வகையான திறன்களை மேம்படுத்த அறிவியல் வினாடிவினா, அறிவியல் திறனறிதல் தேர்வு, எளிய அறிவியல் பரிசோதனைகள், மந்திரமா தந்திரமா நிகழ்ச்சிகள், அறிவியல் திருவிழாக்கள் மற்றும் பல்வேறு வகையான போட்டிகள், நிகழ்வுகளை சிறு கிராமத்திலிருந்து மாநிலம் வரை ஒவ்வொரு ஆண்டும் நடத்தி வருகிறது. இளம் விஞ்ஞானிகளை உருவாக்கும் நோக்குடன் கடந்த 1992 முதல் மத்திய அரசின் அறிவியல் தொழில்நுட்பத்துறையுடன் இணைந்து தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டை தொடர்ந்து தமிழகத்தில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் நடத்தி வருகிறது. வாசிப்பு பழக்கத்தை மேம்படுத்திட வாசிப்பு இயக்கத்தையும் புத்தகத்திருவிழாக்களையும் நடத்தி வருகிறது. தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் அறிவியல் வெளியீடுகள் சுமார் 300க்கும் மேற்பட்ட தலைப்புகளில் புத்தகங்கள் வெளியீட்டுள்ளது. மாணவர்களுக்காக தமிழில் ”துளிர்” ஆங்கிலத்தில் ”ஜந்தர்மந்தர்”, ஆசிரியர்களுக்காக “விழுது”, பெண்களுக்காக ”அறிவுத்தென்றல்”, அறிவியல் இயக்க உறுப்பினர்களுக்காக “விஞ்ஞான சிறகு”, உள்ளிட்ட இதழ்களையும் வெளியிட்டு வருகிறது. சிறப்பான செயல்பாடுகளுக்காக மாநிலம் முதல் சர்வதேச அளவிலான விருதுகளை பெற்றுள்ளது.