தமிழ்நாடு அறிவியல் இயக்கம் முன்னெடுத்த
அறிவொளி இயக்கம் – கல்வி,கலாச்சார இயக்கம்
அறிவொளியை பற்றி சிறிய அறிமுகம்:
1991 இல் அறிவொளி துவக்கப்பட்டது. அறிவொளி இயக்கம் மத்திய அரசும் மாநில அரசும் இணைந்து நடத்திய திட்டம்.ஆனால்,அதனை மக்கள் இயக்கமாக மாற்றியது தமிழ்நாடு அறிவியல் இயக்கம் தான்.கலைக்குழுக்கள் மூலம் வீதி வீதியாகச் சென்று மக்களைத் தட்டி எழுப்பியது. கல்வியில் அவசியத்தை வலியுறுத்தி ஏராளமான கூட்டங்களும் பயிற்சி வகுப்புகளும் நடத்தப்பட்டன. வேலூர் மாவட்டத்தில் மட்டும் ஐந்து லட்சம் கற்போருக்கு சொல்லித் தர ஐம்பதாயிரம் தொண்டர்கள் அறிவொளி இயக்கத்தில் இணைந்தனர்.
மாநிலம் முழுவதும் எழுத்தறிவு இயக்கம் நடைபெற்றாலும் கன்னியாகுமரி, திருநெல்வேலி, சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம், வேலூர், புதுக்கோட்டை ஆகிய ஏழு மாவட்டங்களில் (அனைத்தும் பிரிக்கப்படாத ஒருங்கிணைந்த மாவட்டங்கள்) தமிழ்நாடு அறிவியல் இயக்கம் ஒருங்கிணைக்கும் பொறுப்பினை ஏற்று தலைமைத் தாங்கி நடத்தியது.
அரசு திட்டத்தை மக்கள் இயக்கமாக மாற்றிய வல்லமை அறிவியல் கொண்டிருந்தது. அறிவொளியில் இணைந்தவர்கள் அறிஞர்கள், பட்டதாரிகள், ஆசிரியர்கள், பெண்கள், விவசாயிகள் என சமூகத்தின் அனைத்து தரப்பினரும் பங்கேற்றதுதான் அறிவொளி இயக்கத்தின் வெற்றி.
காலம் காலமாய் கல்வி மறுக்கப்பட்டவர்களுக்கு எழுத்தறிவினை மடியில் கிடைத்தி ஊட்டிய அறிவொளியை இயல்பாகவே மக்கள் வரவேற்றனர். சமூகமே திரண்டு எழுந்து இந்த இயக்கத்தை நடத்தியது. சாதி,மத உணர்வுகளைக் கடந்து மக்களை ஒற்றுமைப்படுத்தியது ,அறிவொளி. மக்கள் தங்களுக்கு புதிய உறவுகள் கிடைத்ததாக ஆனந்தம் அடைந்தனர்.அதனால்தான் மக்களின் மனதில் நீங்காத இடம் பிடித்துள்ளது அறிவொளி.
அறிவொளி கற்பித்தலில் செய்த மாற்றம்:
அறிவொளியின் வெற்றிக்கு முக்கியக் காரணங்களில் ஒன்று கற்பித்தல் முறையில் செய்த மாற்றங்கள்தான்.
காலை முதல் கடுமையான வேலை செய்து களைத்துத் திரும்பும் உழைப்பாளிகளுக்கு வகுப்பு நடத்த வேண்டும். இரவு ஒருமணி நேரத்தில் தங்களைவிட வயதுக் குறைந்த.,பயிற்சி பெறாத ஆசிரியர்கள் மூலம் நடத்தப்பட வேண்டும்.இத்தனை சவால்களை ஏற்றேதான் அறிவொளி நுழைந்தது.ஆனால்,அறிவொளி மையங்களில் நிறைந்து வழிந்த ஆனந்தம், “மையத்தில் என்னதான் செய்கிறார்கள்” என வினா எழுப்ப வைத்தது.
வகுப்புத் துவங்கும் போது பாட்டு, ஒருவருக்கொருவர் நலம் விசாரிப்பு, வாழ்க்கையோடு சம்பந்தப்பட்ட வார்த்தைகள், மகிழ்ச்சி தரும் விளையாட்டுகள், முதல் கற்றலில் கிடைத்த மகிழ்ச்சி, அவ்வப்போது பாராட்டுகள், வீட்டினர் கொடுத்த ஆதரவு, ஊரார் தந்த ஆதரவு இப்படி பல காரணங்கள். கற்பித்தலில் செய்த புதுமைதான் கற்போர்களை தக்க வைக்க உதவியது.
பள்ளி கல்விக்குள் மாற்றம்:
முதியவர்களையே வகுப்புகளில் தக்க வைக்க புதிய கற்பிக்கும் முறைகளால் முடியும் என்றால், ஏன் குழந்தகளைத் தக்க வைக்க முடியாது?
சமூக சிந்தனைக் கொண்ட கல்வியாளர்கள் உதவியுடன் பள்ளி குழந்தைகளுக்கான புதிய கற்பித்தல் முறைகளை அறிவியல் இயக்கம் உருவாக்கியது . அதுவே,”கற்பது கற்கண்டே” நிகழ்ச்சியாக உருக்கொண்டது..
குழந்தைத் தொழிலாளர்களுக்கான வகுப்புகள் துவக்கப்பட்ட போது செயல்பாட்டுடன் கூடிய ஆனந்தக் கல்வி கொடுக்கப்பட்டது. கல்வி சமூகத்தின் விவாதப் பொருளாக மாற்றப்பட்டது. அறிவொளியின் தாக்கமும் அனுபவமும் கொண்ட உயர் அதிகாரிகள் கல்வித் துறையில் கற்பித்தல் முறையில் மாற்றங்களை அறிமுகம் செய்தனர். செயல்பாடு,விளையாட்டு மற்றும் மகிழ்வுடன் கூடிய கற்பித்தல் முறையை ஆசிரியர்கள் ஏற்கத்துவங்கினர். அறிவியல் இயக்கக் கருத்தாளர்கள் அறிவொளியில் நடைமுறைப்படுத்திக் காட்டிய கற்பித்தல் முறைகள் மாநிலம் முழுவதும் பேரியக்கமாக உருவெடுத்தது.
அறிவொளியைத் தொடர்ந்து தொடர்கல்வி இயக்கம், வளர்கல்வி இயக்கம்,வாழ்ந்து காட்டுவோம்,குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பு இயக்கம் என பல அரசு திட்டங்கள் அமுல் படுத்தப்பட்டன.
அறிவொளி செய்த கலாச்சார மாற்றங்கள்:
அறிவொளியின் சாதனை அதனால் பயனடந்த கற்போர் மட்டுமல்ல.அறிவொளியின் செயல்பாட்டால் ஏற்பட்ட மாற்றங்களும் தான். குழந்தைகளைப் படிக்க வைப்பதை சமூகம் ஏற்றுக்கொண்டது. அதனால் பள்ளிகளில் சேர்க்கை விகிதம் நூறு சதத்தை எட்டியது.
கற்போர்,தொண்டர் இரண்டிலுமே பெண்களே அதிகம் திரண்டனர்.அதனால் இது பெண்கள் இயக்கமாக மாறியது.ஏராளமான வகுப்புகள் பெண்களை ஆற்றல் படுத்த நடத்தப்பட்டன. சைக்கிள் ஓட்டப் பயிற்சி,நீச்சல் பயிற்சி,மேடைப் பேச்சுப் பயிற்சி என பல பயிற்சிகள் நடத்தப்பட்டன.
- பெண்கள் சமுகப் பிரச்சனைகளில் பங்காற்றினர்
- சுதந்திரப் போராட்ட்த்திற்கு பிறகு சமூகப் பிரச்சனைகளுக்காக பெண்கள் திரண்டெழுந்தது அறிவொளிக்குத்தான்.
- ஆணும் பெண்ணும் சமம் என்பதை இணைந்த செயல்பாட்டால் உணர்த்தியது
- பொது மேடைகளில் பெண்கள் சரி சமமாக அமர்ந்தனர்
- நிறைய பெண்கள் சைக்கிள் ஓட்டியது தைரியத்தை விதைத்தது
- வீடுகளில் பெண்களின் மதிப்பு உயர்ந்தது
- இளம் வயது திருமணங்கள் வெகுவாகக் குறைந்தது
- கழிவறை ,பெண்களின் மானப் பிரச்சனையாக விவாதிக்கப்பட்டது.
- கர்பம்,குழந்தை வளர்ப்பு இதில் புதிய பார்வைகள் பெற்றனர்
- உள்ளாட்சித் தேர்தலிலும் சட்டமன்ற தேர்த்தலிலும் பெண்கள் களம் கண்டனர்.பலர் வெற்றி பெற்றனர்
- மூடநம்பிக்கைகள் மீது கேள்விகள் எழுப்பினர்
சாதி மத உணர்வுகளின்றி எல்லோருக்குமான இயக்கமாக அறிவொளி ஜொலித்தது. இதுவே அதன் ஈர்ப்பு சக்தியாக விளங்கியது.அனைத்து மக்களுக்குமான பொதுமேடையாக அறிவொளி அமைந்தது.
- மக்களிடம் ஒற்றுமை உணர்வு வளர்ந்தது
- குடும்ப நிகழ்வுகளில் சொந்தக்காரர்களைப் போலவே அறிவொளிக் குடும்பத்தார் இடம்பிடித்தனர்.
- காதல் திருமணங்கள் பெருகின.சமூகம் இயல்பாக சாதி மறுப்புத் திருமணங்களை அங்கீகரித்தது, ஆசீர்வதித்தது
- முஸ்லீம் பெண்களும் தைரியமாக பொதுத் தொண்டிற்கு வந்தனர்
- மனித நேயம் கரை புரண்டது.தொண்டர்களின் தேவைகளுக்கு உதவ ஆயிரம் கரங்கள் உயர்ந்தன.
அறிவொளி ,அதிகாரிகள் பற்றிய பிரமைகளை உடைத்தது. அதிகாரிகளும் அறிவொளி வேலை என்றால் ஆனந்தத்துடன் செய்தனர்.
- மாவட்ட ஆட்சியர் முதல் அனைத்து அதிகாரிகளும் மக்களுக்கு மிக அருகில் கிடைத்தனர்
- மாவட்ட ஆட்சியர் கோஷமிட்டது, எல்லோரையும் போல வரிசையில் நின்றி உணவு உண்டது, பயிற்சிகளில் தரையில் அமர்ந்தது பல தாக்கங்களை உருவாக்கியது.
.
அறிவொளிப் பிரச்சாரத்தில் மிக முக்கிய பங்கு வகித்தது பாடல்களும் வீதி நாடகங்களும்தான். மண்ணின் வாசம் வீசும் அந்தப்பாடல்கள் மக்களின் வாழ்க்கையோடு இரண்டரக் கலந்துவிட்டன.
- பள்ளி நிகழ்ச்சிகளில் குழந்தைகள் நடனமிட அறிவொளிப் பாடல்களுக்கே நடனமிட்டனர்.
- கல்லூரி நிகழ்ச்சிகளில் அறிவொளிப் பாடல்களும்,நாடகங்களும் இடம்பிடித்தன.
- திருமண நிகழ்வுகளிலும் அறிவொளிப்பாடல்கள் ஒலித்தன.
- இசைக்குழுக்களும் நாடகக் குழுக்களும் உருவாகின.மக்கள் பிரச்சைனைகளை முன்வைத்து நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
அறிவொளியை வாழ்த்திடுவோம்
ஐந்து லட்சம் மக்களுக்கு எழுத்தறிவு தந்த அறிவொளியை இனிய நினைவுகளுடன் வாழ்த்திடுவோம்.
வெல்லட்டும் வெல்லட்டும் அறிவொளி இயக்கம் வெல்லட்டும்.
அறிவொளி ,தங்கள் வாழ்விற்கு ஒளியேற்ற வந்த இயக்கம் என இனங்கண்டு களைத்து கிடந்த நேரத்திலும் கல்வி பெற்ற கற்போர்களை வாழ்த்திடுவோம்.
வாழ்த்துகிறோம், வாழ்த்துகிறோம் கற்போர்களை வாழ்த்துகிறோம்.
சகமனிதன் எழுத்தறிவுப் பெறுவதை சமூகக் கடமையாக ஏற்று எந்தவித எதிர்பார்ப்பும் இன்றி தன்னார்வத்துடன் செயலாற்றிய தொண்டர்களுக்கு வீரவணக்கம் செலுத்திடுவோம்.
வீரவணக்கம், வீரவணக்கம் அறிவொளித் தொண்டர்களுக்கு வீரவணக்கம்
கல்லாமைக்கு எதிரான இப் போராட்டத்தை இரண்டாம் சுதந்திரப் போராக நடத்தி சாதித்துக் காட்டிய சமூகத்தின் சகல மக்களுக்கும் நன்றி கூறுவோம்.
நன்றி,நன்றி,நன்றி சாதித்துக் காட்டிய சமூகத்திற்கு நன்றி நன்றி நன்றி
மாநில அலுவலகம் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் 245, அவ்வை சண்முகம் சாலை, கோபாலபுரம், சென்னை – 86 தொலைபேசி : 044 28113630 மின் அஞ்சல்: tnsfstatecenter@gmail.com |
தொடர்புக்கு : எஸ்.சுப்பிரமணி மாநில பொதுச்செயலர் 7598340424 ஆர். ஜீவானந்தம் மாநில பொருளாளர் 9443406150
|
சிறகு அலுவலகம் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் 6, காக்கா தோப்பு தெரு, மதுரை 625001 |
தொடர்புக்கு : முனைவர் தினகரன் மாநில தலைவர் 9994900064 ஆர். ஜீவானந்தம் மாநில பொருளாளர் 9443406150 இல நாராயணசாமி மாநிலசெயலாளர் 9944052435 |
அறிவியல் வெளியீடுகள் அலுவலகம் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் படேல் தெரு, விருதுநகர் 626001 |
தொடர்புக்கு அ.அமலராஜன் அலுவலக மேலாளர் 94880 54690 எம்.எஸ்.முகமது பாதுசா மாநில ஒருங்கிணைப்பாளர் 94868 27773 |