அறிவியல் மக்களுக்காக, அறிவியல் சுயசார்பிற்காக, அறிவியல் மக்கள் ஒற்றுமைக்காக, அறிவியல் நாட்டு முன்னேற்றத்திற்காக என்ற நோக்கங்களுக்காக கடந்த 1980 முதல் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. அறிவியல் இயக்கம் ஒரு தன்னார்வ மக்கள் இயக்கம். மக்களிடம் குறிப்பாக மாணவர்கள் மற்றும் இளைய தலைமுறையிடம் அறிவியல் மனப்பான்மையை வளர்ப்பதற்காக பல்வேறு விதமான செயல்பாடுகளை அறிவியல் இயக்கம் நடத்தி வருகிறது.அனைவரும் முழு எழுத்தறிவு பெறவேண்டும் என்ற நோக்கத்தில் அரசால் கொண்டுவரப்பட்ட அறிவொளி இயக்கத்தை மிகச்சிறப்பாக தமிழகத்தில் நடத்தியது தமிழ்நாடு அறிவியல் இயக்கம்.மாணவர்களின் பல்வகையான திறன்களை மேம்படுத்த அறிவியல் வினாடிவினா, அறிவியல் திறனறிதல் தேர்வு, எளிய அறிவியல் பரிசோதனைகள், மந்திரமா தந்திரமா நிகழ்ச்சிகள், அறிவியல் திருவிழாக்கள் மற்றும் பல்வேறு வகையான போட்டிகள், நிகழ்வுகளை சிறு கிராமத்திலிருந்து மாநிலம் வரை ஒவ்வொரு ஆண்டும் நடத்தி வருகிறது. இளம் விஞ்ஞானிகளை உருவாக்கும் நோக்குடன் கடந்த 1992 முதல் மத்திய அரசின் அறிவியல் தொழில்நுட்பத்துறையுடன் இணைந்து தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டை தொடர்ந்து தமிழகத்தில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் நடத்தி வருகிறது.
வாசிப்பு பழக்கத்தை மேம்படுத்திட வாசிப்பு இயக்கத்தையும் புத்தகத்திருவிழாக்களையும் நடத்தி வருகிறது. தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் அறிவியல் வெளியீடுகள் சுமார் 300க்கும் மேற்பட்ட தலைப்புகளில் புத்தகங்கள் வெளியீட்டுள்ளது. மாணவர்களுக்காக தமிழில் ”துளிர்” ஆங்கிலத்தில் ”ஜந்தர்மந்தர்”, ஆசிரியர்களுக்காக “விழுது”, பெண்களுக்காக ”அறிவுத்தென்றல்”, அறிவியல் இயக்க உறுப்பினர்களுக்காக “விஞ்ஞான சிறகு”, உள்ளிட்ட இதழ்களையும் வெளியிட்டு வருகிறது.
சிறப்பான செயல்பாடுகளுக்காக மாநிலம் முதல் சர்வதேச அளவிலான விருதுகளை பெற்றுள்ளது. முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம், நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன், சந்திராயன் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை உள்ளிட்ட புகழ்பெற்ற விஞ்ஞானிகள் பல்வேறு நிகழ்வுகளில் கலந்து சிறப்பித்துள்ளனர்.
ஒவ்வொரு வருடமும் சுமார் 10,000 பள்ளிகள் பங்கேற்கும் இந்நிகழ்வுகள் அறிவியல் இயக்கத்தின் தனித்தன்மை வாய்ந்த நிகழ்வுகளாகும். இந்நிகழ்வுகள் அனைத்தும் கிராமம், நகரம்தோறும் ஆர்வம் கொண்ட எவ்வித ஊதியமும் பெறாத தன்னார்வலர்களால் நடத்தப்படுகிறது. விஞ்ஞானிகள், பேராசிரியர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் முதல் விவசாயிகள் மற்றும் அனைத்துத் தரப்பினரும் பங்கேற்கும் ஒரு மக்கள் இயக்கம் தமிழ்நாடு அறிவியல் இயக்கம்.
நடைபெற்று வரும் பணிகள்
தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு (National Children Science Congress NCSC) இந்தியாவில் நடத்தப்படும் குழந்தைகளுக்கான ஒரு நிகழ்வு. 1993லிருந்து, கடந்த 31 ஆண்டுகளாக இந்தியா முழுவதும், அனைத்து மாநிலங்களிலும் ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்பட்டு வருகிறது. இதனை இந்திய அரசின் தொழில் நுட்பத்துறையும், தேசிய அறிவியல் தொழில்நுட்ப பரிமாற்றக் குழுமமும், மற்றும் ஆர்விபிஎஸ்பியும் (Rashtriya Vigyan Evan Prodyogiki Sanchar Parishad RVPSP), இணைந்து நடத்துகின்றன. மாநிலங்களின் அறிவியல் தொழில்நுட்பக்கழகம் / தன்னார்வ இயக்கங்கள் இதில் பங்கேற்று இதனை ஒருங்கிணைத்து நடத்தி வருகின்றன. இந்தியாவின் மற்ற மாநிலங்களில், அரசு சார்ந்த அமைப்புகளும், தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் ஆந்திராவில் தன்னார்வல அமைப்புகளும் நடத்தி வருகின்றன. அகில இந்திய மக்கள் அறிவியல் கூட்டமைப்பைச் சேர்ந்த, புதுவை அறிவியல் இயக்கம் புதுச்சேரி பகுதியிலும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம், தமிழ்நாட்டிலும் இதனை கடந்த 31 ஆண்டுகளாக, சிறப்புடன் நடத்தி வருகின்றன. தற்போது 2024 ஒன்றிய அரசின் நிதி ஒதுக்கீடு இல்லாத நிலையிலும் குழந்தைகள் அறிவியல் மாநாடு என்ற பெயரில் சென்னை கணித அறிவியல் நிறுவனத்துடன் இணைந்து தொடர்ந்து இந்நிகழ்வு நடத்தப்பட்டது
அறிவியல் வெளியிடுகள்
தமிழ்நாடு அறிவியல் இயக்கம் கடந்த 27 வருடங்களாக துளிர் எனும் சிறுவர்களுக்கான அறிவியல் மாத இதழை நடத்தி வருகின்றன. தற்போது விஞ்ஞான துளிர் என்ற பெயரில் தற்போது வெளியிடப்படுகிறது. விஞ்ஞான சிறகு என்ற மாத இதழ் அறிவியல் இயக்க உறுப்பினர்களுக்காக நடத்தப்பட்டு வருகின்றது. பெண்களுக்காக “சமம்” உபகுழு சார்பாக அறிவுத் தென்றல் இருமாதங்களுக்கு ஒருமுறை வெளியிடப்பட்டு வருகிறது. ஆங்கிலத்தில் சிறுவர்களுக்காக ஜந்தர் மந்த ர் (Jantar Mantar) என்ற அறிவியல் இதழை வெளியிடுகிறது. பள்ளி ஆசிரியர்களுக்காக விழுது என்ற அறிவியல் இதழை வெளியிடுகிறது.